விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவராக மலர் முருகன் பதவியேற்பு
விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவராக மலர் முருகன் பதவியேற்றார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருந்து வந்த செல்லதுரை மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 28-ந்தேதி மீண்டும் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 3 வாக்குகள் மட்டுமே பெற்று செல்லதுரை தோல்வியடைந்தார். 16 வாக்குகள் பெற்ற மலர் முருகன் ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நேற்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கோதை, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி பதவி பிரமாணம் செய்து வைக்க ஒன்றியக்குழு தலைவராக மலர்முருகன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதில் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுரேஷ், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் முத்து, இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர் பாலு, மாவட்ட பிரதிநிதி பச்சமுத்து, வெங்கடாசலபதி மற்றும் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.