புகை எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மாலத்தீவு விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்


புகை எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மாலத்தீவு விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்
x

புகை எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பெங்களூரூ-மாலத்தீவு விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கோவை,

கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவு நாட்டின் தலைநகர் மாலிக்கு பகல் 11.45 மணிக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அதில், 92 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்த புகை எச்சரிக்கை அலாரம் ஒலிக்க தொடங்கியது. இதனால் பயணிகள் மற்றும் விமானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே விமானி, கோவை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோவை விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம் உள்பட அவசரகால ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டது.

பயணிகள் மகிழ்ச்சி

இதைத்தொடர்ந்து மதியம் 12.57 மணிக்கு அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சமயோசிதமாக செயல்பட்ட விமானிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த விமானத்தில் புகை எதுவும் வருகிறதா? என்று சோதனை செய்யப்பட்டது. ஆனால் புகை எதுவும் வர வில்லை என்பது ஆய்வில் தெரிந்தது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக புகை எச்சரிக்கை அலாரம் ஒலித்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் அந்த விமானத்தில் ஏதேனும் கோளாறு உள்ளதா என்று விமான பாதுகாப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதனிடையே அந்த விமானத்தில் இருந்த பயணிகள் யாரும் விமானத்தை விட்டு கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.


Next Story