ராயக்கோட்டை அருகேகிணற்றில் ஆண் பிணம்; போலீசார் விசாரணை
ராயக்கோட்டை
ராயக்கோட்டை அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் பிணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பாரத கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி நாயுடு. விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தை லட்சுமணன் (வயது 55) என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று காலை லட்சுமணன் தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் மிதந்தது. இதுகுறித்து அவர் ராயக்கோட்டை போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று கிணற்றில் இருந்து உடலை மீட்டு லட்சுமணன் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
ஆனால் அந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த விவரமும் தெரியவில்லை. பின்னர் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் அடித்துக்கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.