ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 950 பெண் குழந்தைகள்
திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 950 பெண் குழந்தைகள் உள்ளதாக கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார்.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் 2021- ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 வயது வரை உள்ள பிரிவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் எனவும், தமிழ்நாட்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 878 பெண் குழந்தைகள் எனவும், திருப்பூர் மாவட்டத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 950 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் உள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கொல்லப்படுவதை தடுத்து, பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். முதல் நிலையில் இளம் வயது புதுமண தம்பதியர், கர்ப்பிணி, பெற்றோர், இரண்டாம் நிலையில் வளரிளம் பருவத்தினர், மருத்துவமனை, ஆய்வு மையங்கள், மூன்றாம் நிலையில் அலுவலர்கள், ஊராட்சி அமைப்பு, மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் பொதுமக்கள் என இந்த திட்டத்தின் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
விழிப்புணர்வு பேரணி
மாவட்ட அளவில் சாதனை புரிந்த பெண் குழந்தைகளின் பெயரில் பள்ளி மாணவிகள் மரக்கன்று நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கிவைத்தார். இந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பல்லடம் ரோடு வித்யாலயம் வரை சென்று பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் விழிப்புணர்வு குறும் படத்தை கலெக்டர் பார்வையிட்டார். இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வார்மா, சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா, செயலாளர் (சட்டப்பணிகள் குழு) மேகலா மைதிலி, திட்ட இயக்குனர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) மரகதம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.