பயிர் காப்பீடு வழங்குவதில் குளறுபடி குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
கடலூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு வழங்குதில் குளறுபடி நடந்துள்ளதாக குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அளித்த பதில்களும் வருமாறு:-
பயிர் காப்பீடு
ரெங்கநாயகி (விவசாயி) :- பயிர் காப்பீடு செய்வது பற்றி பொதுமக்களுக்கு சரியான புரிதல் இல்லை. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு வழங்கி வருவதில் குளறுபடி உள்ளது. இதை களைய வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் விளைவிக்கக்கூடிய உளுந்து பயிர் தரமானதாக உள்ளது. ஆகவே உளுந்துக்கு புவிசார் குறியீடு பெற்று தர வேண்டும்.
கலெக்டர்:- பயிர் காப்பீடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சக்திவேல் (விவசாயி) :- விருத்தாசலம் பகுதி பாசன வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதை தூர்வார வேண்டும்.
கலெக்டர்:- நம்மிடம் நிதி உள்ளது. ஆகவே எந்தெந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது என்ற பட்டியலை கொடுங்கள். விரைவில் வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.
முறைகேடு
செந்தில்முருகன் (விவசாயி) :- காவனூர் வாய்க்காலை 3 முறை வெட்டி தூர்வாரியதாக கணக்கு காட்டி பணத்தை எடுத்து விட்டனர். ஆனால் இது வரை காவனூர் வாய்க்காலை யாரும் தூர்வாரவில்லை. இந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
கலெக்டர்:- இது பற்றி முறையாக விசாரணை நடத்தப்படும்.
மதியழகன் (விவசாயி) :- மங்களூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 58 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். ஆனால் இங்கு விதை பிரச்சினை உள்ளது. மரபணு விதை என்று கூடுதலாக விலை வைத்து ஏமாற்றுகிறார்கள். மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சி மருந்தையும் வழங்குவதில்லை.
வேளாண்மை அதிகாரி:- பூச்சி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இழப்பீடு
மாதவன் (விவசாய சங்க தலைவர்):- கடந்த ஆண்டு பெய்த மழையால் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டது. இந்த பயிருக்கு காப்பீடு செய்த பல்வேறு கிராம விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை. இதில் பல்வேறு குளறுபடி நடந்துள்ளது. பாரபட்சமின்றி கணக்கெடுத்து பயிர் காப்பீடு வழங்க வேண்டும். விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு குறைந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதை அதிகமாக வழங்க வேண்டும்.
கலெக்டர்:- 4 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவக்குமார் (விவசாயிகள் சங்கம்) :- நிறுத்தப்பட்ட பிரதம மந்திரி நிதி உதவியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.லால்புரம் கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
செல்வராஜ் (விவசாயி) :- பெலாந்துறை வாய்க்காலை தூர்வார வேண்டும்.
பொதுப்பணித்துறை அதிகாரி:- ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் வடிகால் வாய்க்கால்களை தூர்வார அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். ஒப்புதல் வந்தவுடன் பெலாந்துறை வாய்க்காலும் தூர்வாரப்படும்.
இன்சூரன்ஸ்
சரவணன் (விவசாயி) :- மாவட்டத்தில் பயிர் காப்பீடு வழங்கப்பட்டதில் 280 கிராமங்கள் விடுபட்டுள்ளது. இதில் உள்ள குளறுபடியை களைந்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் ரவீந்திரன், ராதா உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளும் பயிர் காப்பீடு திட்டத்தில் குளறுபடி நடந்துள்ளதாகவும், இந்த குறைகளை களைந்து விடுபட்ட அனைத்து விவசாயிகளையும் சேர்த்து இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்றனர். இதை கேட்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இவ்வாறு விவாதங்கள் நடந்தது.