கிணறு தோண்டிய இடத்தில் வெடிக்காமல் இருந்த டெட்டனேட்டர்கள் செயலிழப்பு
ஆலங்குளம் அருகே கிணறு தோண்டிய இடத்தில் வெடிக்காமல் இருந்த டெட்டனேட்டர்கள் செயலிழக்க செய்யப்பட்டன.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே கிணறு தோண்டிய இடத்தில் வெடிக்காமல் இருந்த டெட்டனேட்டர்கள் செயலிழக்க செய்யப்பட்டன.
3 தொழிலாளர்கள் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியில் பால் என்பவரது இடத்தில் கிணறு தோண்டும் பணியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிணற்றில் உள்ள பாறைகளை தகர்த்தெடுப்பதற்காக டெட்டனேட்டர் எனப்படும் வெடிப்பொருளை வெடிக்க வைப்பதற்காக அதனை வெளியில் வைத்து சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் அரவிந்த் (22), ஆசிர் சாலமோன் (27), ராஜலிங்கம் (54) ஆகிய 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.
3 டெட்டனேட்டர்கள்
இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார், ஒப்பந்ததாரர் சக்திவேலை பிடித்து அவரிடம் இருந்த 84 டெட்டனேட்டர், 88 ஜெலட்டின் குச்சிகளையும் கைப்பற்றினர். அவற்றை பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் உள்ள வெடிப்பொருள் குடோனில் வைத்தனர்.
மேலும் கிணறு தோண்டிய இடத்தில் வெடிக்காமல் இருந்த 3 டெட்டனேட்டர்களை அகற்றும் பணியில் நெல்லை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் நிபுணர்கள் ஈடுபட்டனர். ஆனால் இதற்காக எடுத்த பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்தது. மதுரையில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
செயலிழப்பு
இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்னையை சேர்ந்த கமாண்டோ படை பிரிவினர் நேற்று வந்தனர். அவர்கள் நெல்லை நிபுணர்களுடன் இணைந்து டெட்டனேட்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் பாறைக்குள் துளையிட்டு உள்ளே உள்ள டெட்டனேட்டர்களை எடுக்க முடியாததால் கூடுதலாக சில டெட்டனேட்டர்களை கிணற்றுக்கான தோண்டப்பட்ட குழியில் வைத்து வெடிக்க செய்து அங்கு ஏற்கனவே இருந்த 3 டெட்டனேட்டர்களையும் செயலிழக்க ெசய்தனர். இதை வெடிக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் அருகில் வராதவகையில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.