ஓசி பிரியாணி கேட்டு தகராறு செய்த மாம்பலம் போலீசார் பணியிட மாற்றம்
ஓசி பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறு செய்த மாம்பலம் போலீசார் 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் பிரியாணி கடை நடத்தி வருபவர் காசிம் (வயது 45). இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் சென்ற மாம்பலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் 2 பேர் ஓசி பிரியாணி கேட்டனர். அப்போது, காசிம் இன்னும் வியாபாரம் ஆகவில்லை, எனவே பணத்தை கொடுத்து பிரியாணியை வாங்கி செல்லுமாறு கூறினார்.
இதனால், ஆத்திரம் அடைந்த போலீசார் 2 பேரும் காசிமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்து சென்ற 2 போலீஸ்காரர்களும் அன்று இரவு மது அருந்திவிட்டு, மீண்டும் காசிம் கடைக்கு சென்று பிரியாணி சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும், காசிமிடம் "இனி கடை நடத்த முடியாது" என மிரட்டியதுடன், பிரியாணிக்கும் பணம் தர முடியாது என்று கூறினர்.
பணியிட மாற்றம்
2 போலீசார் ரகளையில் ஈடுபட்டதை, கடையில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். வீடியோ எடுப்பதை பார்த்ததும், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை 2 போலீசாரும் அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வலம் வருகின்றன.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய மாம்பலம் போலீசாருக்கு, சக போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஆனந்த் மற்றும் ஜெயபால் ஆகியோர் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது, அந்த போலீசார் 2 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.