விஷப்பாம்புகளை பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
விஷப்பாம்புகளை பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கொல்லம் பிள்ளையார் கோவில் மேல வீதியைச் சேர்ந்த முருகன் மகன் சதீஷ்குமார் (வயது25). இவர் நல்லபாம்பு, கண்ணாடி விரியன், மண்ணுளிப் பாம்பு, உடும்பு, கீரிப்பிள்ளை, தவிட்டுக் குருவி, பச்சைக்கிளி போன்றவற்றை பிடித்து அவற்றை கூண்டுகளில் அடைத்தும், இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் வந்தார். இது பற்றி தமிழ்நாடு வனம் மற்றும் வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு வனச்சரக அலுவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான வனச்சரகர்கள் திருவிசநல்லூர் சதீஷ்குமார் இல்லத்திற்கு சென்று சோதனையிட்டனர். வீட்டின் எதிர்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் கருப்பு நிற தொட்டியில் 2 அடி நீளம் உள்ள மண்ணுளிப் பாம்பு உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வன உயிரினங்களை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட இரும்புகூண்டு, கவண்டி உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். மண்ணுளிப் பாம்பை விற்பனை செய்வதற்காக பிடித்து வைத்திருந்ததும் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை வனச்சரகர்கள் கைது செய்து திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.