பெண்ணிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது
சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் நகை வழிப்பறி செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்ததுடன், அவர் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் நகை வழிப்பறி செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்ததுடன், அவர் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண்ணிடம் வழிப்பறி
விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பாரை சேர்ந்தவெற்றிவேல் மகன் செல்வமுருகன் (வயது 32). இவருக்கு திருமணமாகி சாத்தான்குளம் அருகேயுள்ள பெருமாள்குளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதிஅப்பகுதியில் உள்ள பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த ராஜகுமரன் மனைவி ஜெயந்தியை (40) தாக்கி, அவர் அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்து கொண்டு ஓடினார். இதில் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி கூச்சலிடத்தால், அப்பகுதி மக்கள் திரண்டு செல்வமுருகனை மடக்கி பிடித்து நகையை மீட்டனர். அப்போது பொதுமக்கள் சிலர் ஆவேசத்துடன் தாக்கியதில் செல்வமுருகன் படுகாயம் அடைந்தார்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று செல்வமுருகனை மீட்டு நெல்லைஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செல்வமுருகனுக்கு சிகிச்சை முடிந்தநிலையில் சாத்தான்குளம் போலீசார் கைது செய்து திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம், நகைபறிப்பில் ஈடுபட்டபோது தன்னை பொதுமக்கள் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என செல்வமுருகன் புகார் செய்தார்.
8 பேர் மீது வழக்கு
இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி செல்வமுருகனை தாக்கியதாக பெருமாள்குளத்தை சேர்ந்த 8 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்