கருப்பூரில் ஓட்டல் உரிமையாளரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
கருப்பூரில் ஓட்டல் உரிமையாளரை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
கருப்பூர்,
கருப்பூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சையது அப்தாகீர் (வயது 30). குண்டூர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 29-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இவரது ஓட்டலுக்கு கருப்பூரை சேர்ந்த கவுதமன்(23) என்ற வாலிபர் வந்தார். அப்போது கவுதமனிடம் டிபன் இல்லை என்று ஓட்டல் உரிமையாளர் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கவுதமன், அவரை அவதூறாக பேசி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் ஓட்டலை பூட்டி விட்டு சையது அப்தாகீர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை கவுதமன் வழிமறித்து தான் வைத்திருந்த பீர்பாட்டிலால் மண்டையில் ஓங்கி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த சையது அப்தாகீர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கவுதமனை கைது செய்தனர்.