நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் மீது தாக்குதல்:தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் கைது
நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவரை தாக்கிய சம்பவத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம்,
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவராக உள்ளவர் கே.ஜெயச்சந்திரராஜா (வயது 56). இவர் சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் 21-ந்தேதி சிதம்பரம் மானாசந்து அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அவரை 2 பேர் தாக்கினர். இதை தொடர்ந்து, கடந்த 5-ந்தேதி சிதம்பரம் மெய்காவல்தெருவில் சென்ற போது, ஜெயச்சந்திரராஜாவை மர்மநபர்கள் வழிமறித்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் விசாரித்து வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் போில் சிதம்பரம் உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் 8 தனிப்படையினர் மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில், கடந்த 8-ந்தேதி 7 பேரை கைது செய்தனர்.
2 பேர் கைது
இதில் தலைமறைவாக இருந்த கும்பகோணம் நாச்சியார் கோவில் மருத்துவமனை தெருவை சேர்ந்த ஏகாம்பரம் மகன் ரகுராமன் (45), கும்பகோணம் பழைய பஸ்நிலையம் பகுதி முகமது ரபீக் மகன் அன்சாரி(23) ஆகியோரை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று இவர்கள் 2 பேரையும் தனிப்படை பாலீசார் கைது செய்தனர். இவர்களில் ரகுராமன் (45) தேனியில் உள்ள கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.