1 ரூபாய் சில்லரைக்காக பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
அந்தியூரில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூரை நோக்கி நேற்று காலை 7.40 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கவியரசன் (24) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். அம்மாபேட்டையை அடுத்துள்ள பூதப்பாடி பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறியுள்ளார். இதைத்தொடர்ந்து கண்டக்டரிடம் அந்த வாலிபர் 10 ரூபாய் கொடுத்து அம்மாபேட்டைக்கு டிக்கெட் வாங்கியுள்ளார். டிக்கெட் தொகை 7 ரூபாய் போக 2 ரூபாயை அந்த வாலிபரிடம் கொடுத்து விட்டு மீதி சில்லரை 1 ரூபாயை இறங்கும்போது தருவதாக கண்டக்டர் கூறியதாக தெரிகிறது.
அதற்கு அந்த வாலிபர் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அம்மாபேட்டை பஸ் நிறுத்தம் வந்ததும் வாலிபர் பஸ்சை விட்டு் இறங்கினார். பின்னர் அவர் கல்லால் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார்.
இதுகுறித்து கண்டக்டர் கவியரசன் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பஸ் கண்ணாடியை உடைத்தவர் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னமுழியனூர் பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரது மகன் பூபதி (27) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.