பெண்ணிடம் மோசடி செய்த ஆசாமி கைது


பெண்ணிடம் மோசடி செய்த ஆசாமி கைது
x

சி.பி.ஐ. அதிகாரி என செல்போனில் தொடர்பு கொண்டு பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சி.பி.ஐ. அதிகாரி என செல்போனில் தொடர்பு கொண்டு பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

சி.பி.ஐ. அதிகாரி

நாகர்கோவில் மேலராமன்புதூரை சேர்ந்த அழகேஸ்வரன் மனைவி உதிராதேவி (வயது 32). இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை சி.பி.ஐ. அதிகாரி என்று கூறியுள்ளார். பின்னர் அவர் பலருக்கும் வேலை வாங்கி கொடுத்து இருப்பதாகவும், உங்களுக்கும் வேலை வாங்கி தருவதாக கூறி இருக்கிறார்.

அதற்கு முதற்கட்டமாக ரூ.60 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய தேவி உடனடியாக போன் பே என்னும் செல்போன் செயலி மூலம் அந்த நபருக்கு பல தவணைகளில் ரூ.60 ஆயிரம் அனுப்பினார். பிறகு தேவியின் வீட்டுக்கு நேரில் வந்த அவர் சான்றிதழ் வாங்கி சரிபார்த்து விட்டு வேலை தயாராக உள்ளது என கூறியுள்ளார்.

நகை- பணம் மோசடி

பின்னர் புகைப்படம் எடுக்க வேண்டும், எனவே கழுத்தில் அணிந்துள்ள நகையை கழற்றி வையுங்கள் என்று அந்த வாலிபர் கூறி இருக்கிறார். அந்த வாலிபரின் பேச்சை கேட்டு தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி அங்குள்ள நாற்காலியில் வைத்துள்ளார். அப்போது தனக்கு தாகம் எடுப்பதாகவும், தண்ணீர் கொண்டு வரும்படியும் அந்த வாலிபர் கூறியதும், தேவி சமையல் அறைக்கு சென்றார்.

இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது தேவியின் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை காணவில்லை. சி.பி.ஐ. அதிகாரி போல நடித்து அந்த வாலிபர் ரூ.60 ஆயிரம் மோசடி செய்ததோடு ரூ.1 லட்சம் 2 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மற்றும் செல்போனையும் வீட்டில் திருடியதை அதன் பிறகு தான் அவர் நம்பினார்.

வாலிபர் கைது

மேலும் இந்த சம்பவம் குறித்து நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் தேவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் இதுதொடர்பாக வேலூர் சந்திரம்புதூர் பகுதியை சேர்ந்த அன்புகுமார் (27) என்பவரை நேற்று நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story