கோவிலை புனரமைப்பதாக ரூ.44 லட்சம் மோசடி 'யூடியூப்' மூலம் பணம் வசூலித்தவர் கைது


கோவிலை புனரமைப்பதாக ரூ.44 லட்சம் மோசடி யூடியூப் மூலம் பணம் வசூலித்தவர் கைது
x

கோவிலை புனரமைப்பதாக ‘யூ டியூப்’ மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.44 லட்சம் வசூலித்து மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலுக்கு சொந்தமாக அப்பகுதியில் பல இடங்களில் உபகோவில்கள் உள்ளன.

அதன்படி மலையடிவாரத்தில் உள்ள பெரியசாமி கோவிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நிறைய சிலைகள் உள்ளன. அதில் பல சிலைகள் சிதிலமடைந்து காணப்படுவதால் பழமையான கோவிலையும், சிலைகளையும் புனரமைப்பதாக கூறி ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை 3-வது குறுக்கு தெருவைச்சேர்ந்த பா.ஜ.க. ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் (வயது 33) என்பவர் "இளைய பாரதம்" என்ற பெயரில் 'யூ டியூப்' மூலம் நிதி திரட்டினார்.

ரூ.44 லட்சம் மோசடி

இவ்வாறு 5 மாதங்களுக்கும் மேலாக வெளிநாடுகள் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து கோவில் புனரமைப்பு பணிக்காக பொதுமக்கள், கார்த்திக் கோபிநாத் வங்கி கணக்கிற்கு ரூ.44 லட்சத்துக்கும் மேல் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணம் கோவில் புனரமைப்பு பணிக்காக பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிகிறது.

இதுகுறித்து சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அரவிந்தன், ஆவடியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதில், கார்த்திக் கோபிநாத், கோவிலை புனரமைப்பதாக பொதுமக்களை ஏமாற்றி 'யூ டியூப்' மூலம் பணம் வசூலித்து, அதை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்தி கொண்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

வாலிபர் கைது

அதன்பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று காலை கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர். அவர் மீது 406, 420, 66 (டி) ஐ.டி. சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேற்று மாலை அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தற்போது கார்த்திக் கோபிநாத் வங்கி கணக்கில் ரூ.3½ லட்சம் மட்டும் உள்ளதாகவும், மீதி பணம் எங்கே? என்பது குறித்தும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கார்த்திக் கோபிநாத் கைதானதை அறிந்ததும் பா.ஜ.க. நிர்வாகிகள் நேற்று மதியம் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் குவிந்து அவருக்கு ஆதரவாக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story