அரசு தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்டவர் கைது


அரசு தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்டவர் கைது
x

கறம்பக்குடியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ள இடம் தனக்கு சொந்தமானது என கூறி அந்த பள்ளிக்கு பூட்டு போட்டவர் கைது செய்யப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

பள்ளிக்கு பூட்டு

கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட தட்டாவூரணியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் 50 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடக்க நிலை கல்வி பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

அங்கு பள்ளியின் முகப்பு கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் வாசலில் காத்திருந்தனர். தொடர்ந்து பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி முகப்பு கேட்டில் கூடுதல் பூட்டு போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதி மக்களிடம் விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் சின்னையா (வயது 50) என்பவர் பள்ளிக்கு பூட்டு போட்டது தெரியவந்தது.

வெட்டவெளியில் அமர்ந்திருந்த மாணவர்கள்

இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அங்கு சென்று சின்னையாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரிடம் இருந்து சாவியை பெற்று பள்ளியை திறந்து விட்டனர். இதை தொடர்ந்து 2 மணி நேரமாக வெட்டவெளியில் அமர்ந்து இருந்த மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்.

இதையடுத்து சின்னையாவை கறம்பக்குடி போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தனக்கு சொந்தமான இடத்தில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவை இருப்பதாகவும், அதை தானமாக அரசுக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பேரூராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 3 மாதமாக அந்த பணியை மற்றொருவர் கவனித்து வருவதாகவும் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் இலவசமாக வழங்கிய இடத்தில் செயல்படும் பள்ளியை பூட்டிய தாகவும் தெரிவித்தார்.

சிறையில் அடைப்பு

இதைத்தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் சற்பிரசாதம் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, மாணவர்களுக்கு இடையூறு செய்ததாக சின்னையாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஆலங்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story