பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
சென்னையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை செய்யும் 32 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம், தரமணி மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த உயர் போலீஸ் அதிகாரியின் தாயாரை நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் வந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், பெண் போலீசை பார்த்து, பாட்டு பாடி உல்லாசத்துக்கு அழைத்ததாக தெரிகிறது. இதற்கு அவர், தான் ஒரு பெண் போலீஸ் என்றும், என்னிடமே வாலாட்டுகிறாயா என்றும் கடுமையாக எச்சரித்தார். ஆனால் அந்த வாலிபர் அதை சட்டை செய்யாமல் தொடர்ந்து, தொடர்ந்து பாட்டு பாடியவாறு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
போலீஸ்காரர் மீதும் தாக்குதல்
அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் சரவணன் அந்த வாலிபரை கண்டித்தார். உடனே அந்த வாலிபர் தனது நண்பர்கள் சிலரை செல்போனில் பேசி சம்பவ இடத்துக்கு அழைத்தார். நண்பர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அவர்களுடன் சேர்ந்து போலீஸ்காரர் சரவணனையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தகவல் தெரிந்து கோட்டூர்புரம் உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் போலீஸ் படையுடன் அங்கு வந்தனர். அவர்கள் பெண் போலீசிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபரையும், அவரது நண்பர் ஒருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
மருத்துவ பிரதிநிதி
கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயர் விக்னேஷ் (29) என்றும், மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்கிறார் என்றும் தெரியவந்தது. அவரது நண்பரின் பெயர் குணசேகரன். அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.