சிதம்பரம் ஸ்டுடியோவில் 5 பவுன் சங்கிலியை திருடியவர் கைது
சிதம்பரம் ஸ்டுடியோவில் 5 பவுன் சங்கிலியை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம்,
சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி கலைமணி (வயது 38). இவர் சிதம்பரம் விஷ்ணுபுரத்தில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கலைமணி தனது 5 பவுன் சங்கிலியை கழற்றி ஸ்டுடியோவில் வைத்திருந்தார். அப்போது ஸ்டுடியோவுக்கு வந்த மர்மநபர் யாரோ தங்க சங்கிலியை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிதம்பரம் காசுக்கடை தெருவில் உள்ள ஒரு அடகு கடைக்கு நேற்று 50 வயது மதிக்கத்தக்க நபர் வந்தார். பின்னர் அவர் தான் வைத்திருந்த 5 பவுன் சங்கிலியை அடகுகடைக்காரரிடம் கொடுத்து உருக்கி தருமாறு கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அடகுக்கடைக்காரர் இதுபற்றி சிதம்பரம் நகர போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து நகையை கொடுத்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் காட்டுவராயன்குறிச்சியை சேர்ந்த சிவராஜ்(வயது 50) என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் விஷ்ணுபுரத்தில் கலைமணி என்பவருக்கு சொந்தமான ஸ்டுடியோவில் இருந்த 5 பவுன் சங்கிலியை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து நகர போலீசார் சிவராஜை அண்ணாமலைநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து அவரை அண்ணாமலைநகர் போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 5 பவுன் சங்கிலியை மீட்டனர்.