பொருள் வாங்குவதாக நடித்து நகைகளை திருடியவர் கைது
பேரணாம்பட்டில் பொருள் வாங்குவதாக நடித்து நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பேரணாம்பட்டு டவுன் ஜெயா வீதியில் துரை என்பவர் எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் இவரது மனைவி லீலா கடையில் இருந்தார். அவர் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள செயின், மோதிரத்தை மேஜை மீது வைத்திருந்தார். அப்போது பொருள் வாங்குவதுபோல் நடித்த ஒருவர் லீலாவின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் லீலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
இந்த நிலையில் பேரணாம்பட்டு வீ.கோட்டா ரோடு புத்துக் கோவில் சந்திப்பு சாலையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன தணிக்கை செய்தபோது சந்தேகப்படும் படியான ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஆம்பூர் டவுன் ஹவுசிங் போர்டில் வசிக்கும் ஷகீல் அஹம்மத் (வயது 48) என்பதும், லீலா கடையில் இருந்த போது பொருள் வாங்குவதாக நடித்து கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி விற்று செலவு செய்தததையும் ஒப்புக்கொண்டார்.
அவர் குடியாத்தம், ஆம்பூர் பகுதிகளில் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஷகீல் அஹம்மதை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 2 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஷகீல் அஹம்மத் காட்பாடி சப் மாஜிஸ்ட்டிரேட் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.