வடபழனி முருகன் கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது
சினிமா பட பாணியில் வடபழனி முருகன் கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
வடபழனி,
சென்னை வடபழனியில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உற்சவர் சன்னதி முன்பு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஒருவர், அந்த உண்டியல் அருகே நீண்டநேரமாக அமர்ந்து இருந்தார்.அவ்வப்போது அவரது கை உண்டியல் அருகே செல்வதும், வருவதுமாக இருந்தது. இதனை கோவில் ஊழியர் சந்தோஷ் கவனித்தார். அப்போது அந்த நபர், கையில் ஒரு நீண்ட குச்சியில் இருபுறமும் ஒட்டும் டேப்பை சுற்றி, அதனை உண்டியல் துவாரம் வழியாக உள்ளே விட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் நோட்டுகளை நூதன முறையில் திருடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஆஸ்பத்திரி ஊழியர் கைது
பின்னர் அங்கிருந்த பக்தர்கள் உதவியுடன் அந்த நபரை கையும், களவுமாக பிடித்தார். அந்த நபரின் கையில் டேப்பும், உண்டியலில் இருந்து திருடிய பணமும் இருந்தது. அவரை வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், 7-வது தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 48) என்பதும், தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. செலவுக்கு பணம் இல்லாதபோது கோவிலுக்கு சாமி கும்பிடுவது போல் வந்து உண்டியலில் இதுபோல் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே இது போன்ற திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
நடிகர் சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' திரைப்படத்தில் இதுபோல் 'பபுள்கம்மை' குச்சியில் சுற்றி அதனை பயன்படுத்தி கோவில் உண்டியலில் இருந்து பணத்தை திருடுவதுபோல் ஒரு காட்சி இடம்பெற்று இருக்கும். அதே பாணியில் நடைபெற்ற இந்த நூதன திருட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.