வாலிபரின் மண்டை உடைப்பு
மதுக்கடை அருகே ஏற்பட்ட தகராறின் போது வாலிபரின் மண்டையை உடைத்த சம்பவத்தில் விவசாயி கைது செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுக்கடை அருகே ஏற்பட்ட தகராறின் போது வாலிபரின் மண்டையை உடைத்த சம்பவத்தில் விவசாயி கைது செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுக்கடை அருகே தகராறு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா ராங்கியன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் விஜய் (வயது32), அதே ஊரை சேர்ந்த சந்திரபோஸ் மகன் பிரேம்நாத் (32) ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று மாலை பக்கத்து ஊராகிய திப்பன்விடுதி கிராமத்திலுள்ள மதுக்கடை அருகே அவர்களது லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த திப்பன்விடுதியைச் சேர்ந்த விவசாயி குமார் (52) என்பவருக்கும், விஜய் மற்றும் பிரேம்நாத் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மண்டை உடைப்பு
பிறகு லோடு ஆட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்த விஜய் மற்றும் பிரேம்நாத் ஆகிய இருவரையும் குமார் மற்றும் அதே திப்பன்விடுதியை சேர்ந்த சண்முகம், கார்த்திக், ராஜேந்திரன் ஆகிய 4 பேரும் வழிமறித்து தாக்கினர். அப்போது உருட்டு கட்டையால் தாக்கப்பட்ட பிரேம்நாத்திற்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரேம்நாத் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதில் லோடு ஆட்டோவும் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
கொலை முயற்சி வழக்கில் கைது
இதுகுறித்து விஜய் கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சண்முகம், கார்த்திக், ராஜேந்திரன் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.