துபாயில் இருந்து நாகை வந்த வாலிபரிடம், 50 பவுன் தங்கம் இருந்த பார்சலை கேட்டு சரமாரி தாக்குதல்
துபாயில் இருந்து நாகை வந்த வாலிபரிடம் 50 பவுன் தங்கம் இருந்த பார்சலை கேட்டு சரமாரி தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
துபாயில் இருந்து நாகை வந்த வாலிபரிடம் 50 பவுன் தங்கம் இருந்த பார்சலை கேட்டு சரமாரி தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
துபாயில் வேலை
நாகை மருந்து கொத்தள காளியம்மன் கோவில் தெரு ஸ்ரீதர் காலணியில் வசிப்பவர் கணேஷ்குமார். இவருடைய மகன் சந்தோஷ் சிவம்(வயது 23). இவர், துபாய் நாட்டில் வேலை பார்த்து வந்தார்.
இவரிடம், துபாய் நாட்டில் வேலை பார்த்து வந்த வாசிம் என்பவர் சில பொருட்களை கொடுத்து நாகையில் உள்ள தனது உறவினர் பாசித் என்பவரிடம் கொடுத்து உதவும்படி கேட்டுள்ளார்.
50 பவுன் தங்கம்
அதன்படி வாசிம் கொடுத்த பொருட்களுடன் கடந்த 2-ந் தேதி சந்தோஷ் சிவம், ஊருக்கு திரும்பி வந்தார். சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் சந்தோஷ் சிவத்தின் பொருட்களை சோதனை செய்தபோது, ஒரு பார்சலில் 50 பவுன் தங்கம் இருப்பதாக கூறி அதை கைப்பற்றினர்.
அந்த பார்சல் துபாய் நாட்டில் வேலை பார்க்கும் வாசிம் என்பவர் தனது உறவினரிடம் கொடுக்க சொல்லி கொடுத்து அனுப்பியதாக சந்தோஷ் சிவம் கூறினார். அதன்பேரில் சுங்கத்துறையினர் அவரை விடுவித்தனர்.
பார்சலை கேட்டு தாக்குதல்
அதன் பின்னர் நாகை புதிய பஸ் நிலையத்திற்கு வந்த அவரிடம் பாசித், சல்மான் என்கிற சதாம் மற்றும் சிலர் வாசிம் கொடுத்து அனுப்பிய பார்சலை கேட்டனர். அப்போது அவர்களிடம் அந்த பார்சலை சுங்கத்துறையினர் கைப்பற்றி விட்டதாக சந்தோஷ் சிவம் கூறி உள்ளார்.
இதை நம்பாத அவர்கள், கடந்த 4-ந் தேதி அன்று நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு சந்தோஷ் சிவத்தை அழைத்து சென்று, ஒரு அறையில் அடைத்து வைத்து கண்மூடித்தனமாக தாக்கி துன்புறுத்தினர்.
பெல்ட்டால் அடித்து துன்புறுத்தினர்
பின்னர் நாகை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து சென்று அங்கு வைத்தும் சந்தோஷ் சிவத்தை அவர்கள் கொடூரமாக தாக்கி உள்ளனர்.
4 பேரும் சேர்ந்து தாக்கியதில் வலி தாங்க முடியாமல் சந்தோஷ் சிவம் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு விடுதி மேலாளர் கண்டித்ததால் அவரை மீண்டும் நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள விடுதிக்கு அழைத்து வந்து பெல்ட்டால் சரமாரியாக அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மோதிரம்-பாஸ்போர்ட் பறிப்பு
இதையடுத்து கடந்த 5-ந் தேதி இரவு சந்தோஷ் சிவத்திடம் இருந்த 2 செல்போன்கள், தலா ஒரு பவுன் எடையுள்ள 2 தங்க மோதிரங்கள், வெள்ளி சங்கிலி, எமிரேட்ஸ் நாட்டு அடையாள அட்டை, பாஸ்போர்ட், எமிரேட்ஸ் நாட்டு சிம் கார்டு, ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்து கொண்டு அவரை விடுவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கணேஷ்குமார், வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.
4 பேர் கைது
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ் சிவத்தை பாசித், சல்மான் என்கிற சதாம் உள்ளிட்டோர் தாக்கியது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை கட்டியப்பர் கோவில் தெருவை சேர்ந்த முகமது அப்ரார்(23), நாகை பண்டகசாலை தெருவை சேர்ந்த நரேந்திர நாத்(30), நாகை அப்பு மேஸ்திரி சந்து, நீலா வடக்கு தெருவை சேர்ந்த முகமது யூசுப்(27), நாகை புதுமனை தெருவை சேர்ந்த முகமது அமினுதீன்(28) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாசித் உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகையை கேட்டு வாலிபரை அறையில் அடைத்து வைத்து தாக்கிய சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.