தாயின் உடலை வீட்டுக்குள் புதைத்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன்
கொள்ளிடம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்த தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகன் வீட்டுக்குள்ளேயே புதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்த தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகன் வீட்டுக்குள்ளேயே புதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கிராமம் மேலதெருவை சேர்ந்தவர் இந்திராணி (வயது65). இவரது கணவர் சண்முகம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகன் பிரபாகரன். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.இந்திராணி 100 நாள் வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.
தாயின் உடலை வீட்டுக்குள் புதைத்தார்
கடந்த 3 நாட்களாக இந்திராணி உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அவர் உயிரிழந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட பிரபாகரன் தாயின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார்.பின்னர் அவர் மண் வெட்டியை எடுத்து வீட்டிற்குள் பள்ளம் ேதாண்டி தாயின் உடலை புதைத்துள்ளார். உடலை புதைத்த இடத்தில் மஞ்சள் தெளித்து, கற்பூரம் ஏற்றி காண்பித்துள்ளார்.
பிரேத பரிசோதனை
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்திராணி வீட்டில் இல்லாததால் சந்தேகம் அடைந்து புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டுக்குள் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு குழி தோண்டப்பட்டு மூடப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து சீர்காழி தாசில்தார் செந்தில் முன்னிலையில் அங்கு தோண்டப்பட்டு இந்திராணியின் உடலை வெளியே எடுத்தனர். அங்கு வந்த சீர்காழி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே இந்திராணியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
பரபரப்பு
பிரேத பரிசோதனையில் இந்திராணி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. உயிரிழந்த தாயின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட மகன், வீட்டுக்குள்ளேயே புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.