தஞ்சையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி


தஞ்சையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி
x

தஞ்சையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 24 கட்சிகள்-அமைப்பினர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 24 கட்சிகள்-அமைப்பினர் பங்கேற்றனர்.

மனிதசங்கிலி

தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரையை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி தஞ்சையில் நேற்றுமாலை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை ரெயிலடியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்பட 24 கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு கைகோர்த்து நின்றனர்.

மத்தியகுழு உறுப்பினர்

இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டார்.மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி.ஜி.ராஜேந்திரன்,முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.வரதராஜன், துணைத் தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி நிருபர்களிடம் கூறும்போது, போராடுகிற இஸ்லாமியர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. கடைகள் தாக்கப்படுகின்றன. பல்வேறு வரிகள் விதித்து மக்கள் அதல பாதாளத்துக்கு ஆழ்த்தப்படுகின்றனர். தங்களது கொள்கைகளால் மக்கள் கோபப்படக்கூடாது என்பதால் திசை திருப்புகிற வேலையை பா.ஜ.க. அரசு செய்கிறது.

இதற்காக தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக, ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைந்து மக்கள் பக்கம்தான் இருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பக்கம் இல்லை என்பதை உரத்த குரல் கொடுக்கிற நல்லிணக்க இயக்கமாக இந்த மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. தமிழகம் பெரியார் பிறந்து வாழ்ந்த மண்ணாக இருந்தாலும் கூட, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்துத்துவ அமைப்புகள் படிப்படியாக உள்ளே இறங்குகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஷாகா பயிற்சி நடைபெறுகிறது. இதுபோன்ற விஷயங்களில் அரசு இன்னும் உறுதியான நடவடிக்கையை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

மனித சங்கிலி போராட்டத்தையொட்டி தஞ்சை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.


Next Story