தண்டவாளத்தில் தலை வைத்து ஆண் தற்கொலை
தண்டவாளத்தில் தலை வைத்து ஆண் தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளியணை அருகே உள்ள கல்லுமடை பகுதியில் கரூர்-திண்டுக்கல் ரெயில் பாதை தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். அப்போது, ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற ரெயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அந்த நபர் யார்? எதற்காக இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டார்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.