தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டவர் கைது; 10 ஆடுகள் மீட்பு


தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டவர் கைது; 10 ஆடுகள் மீட்பு
x

தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டவர் கைது; 10 ஆடுகள் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

கீரனூர் போலீஸ் உட்கோட்ட பகுதிகளான மாத்தூர், மண்டையூர், கீரனூர் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் ஆடு திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து ஆடு திருட்டில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்ய மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் பிரிவுரோடு அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் ஆடு ஒன்றை கயிற்றால் கட்டி ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கந்தர்வகோட்டை அருகே உள்ள வெள்ளைப்பட்டியை சேர்ந்த பாஸ்கர் (வயது 47) என்பதும் அவர் மாத்தூர், மண்டையூர், கீரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பாஸ்கரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 வெள்ளாடுகள் மற்றும் ஆடு திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் பாஸ்கரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட ஆடுகளை போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.


Next Story