சேலம் மாநகராட்சியில் வேலைக்கு சேர பெண்ணுக்கு போலி வாரிசு சான்றிதழ் வழங்கியவருக்கு வலைவீச்சு


சேலம் மாநகராட்சியில் வேலைக்கு சேர பெண்ணுக்கு போலி வாரிசு சான்றிதழ் வழங்கியவருக்கு வலைவீச்சு
x

சேலம் மாநகராட்சியில் வேலைக்கு சேர பெண்ணுக்கு போலி வாரிசு சான்றிதழ் வழங்கியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் மேற்கு தாசில்தார் அருள் பிரகாஷ், சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், சேலம் மாநகராட்சி 21-வது வார்டில் தூய்மை பணியாளராக உமா என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். அவர் பணியில் சேர்ந்த போது மேற்கு தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்படுவதாக சமர்ப்பித்த வாரிசு சான்றிதழ் போலியானது என தெரியவந்துள்ளது. மேட்டூர் பொட்டனேரி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் வாரிசு சான்றிதழை போலியாக தயாரித்து வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் பேரில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மாநகராட்சி பணியில் சேர பெண்ணுக்கு போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து கொடுத்ததாக பரமேஸ்வரன் மீது மோசடி உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் வேறு யாருக்கும் போலி சான்றிதழ் தயாரித்து வழங்கி உள்ளாரா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான பரமேஸ்வரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story