அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில்
அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராக்காயி அம்மன் கோவில்
1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த புராண சிறப்புடைய திருத்தலமானது அழகர் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவிலாகும்.இந்த கோவில் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் 1,400 அடி உயரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்து உள்ளது.
இங்குள்ள ராக்காயி அம்மன் அமர்ந்த நிலையில் மேற்கு முகம் பார்த்து காட்சி தருகிறார். உலகப்புகழ் பெற்ற வற்றாத ஜீவநதியாக நூபுர கங்கை என்னும் சிலம்பாறு கிழக்கு திசையில் இருந்து எப்போதும் வழிந்து கொண்டே இருக்கிறது. மருத்துவ குணமும் மூலிகை சிறப்பும் நிறைந்தது. சிலப்பதிகாரம் போன்ற சங்க கால இலக்கிய நூல்களில் இதன் பெருமைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற ராக்காயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 11-ந் தேதி நடந்தது. அதன் பின்னர் தினமும் யாக சாலை பூஜைகள் நடந்தன.
மண்டலாபிஷேக விழா
நேற்று 48-வது நாள் மண்டலாபிஷேக விழா இந்த கோவிலில் நடந்தது. இதில் அங்குள்ள யாகசாலையின் முன்பாக பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, நூபுர கங்கை தீர்த்தத்தினால் பூஜைகள் நடத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ராக்காயி அம்மன் காட்சி தந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.