3½ டன் மாம்பழங்கள் அழிப்பு
திருப்பூர், மே.12-
திருப்பூர் மாநகரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 3½ டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
3½ டன் மாம்பழங்கள் பறிமுதல்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, பாலமுருகன், தங்கவேல், கேசவராஜ், கோடீஸ்வரன், சிரஞ்சீவி, ரகுநாதன், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் 4 குழுவாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாம்பழ குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
கே.எஸ்.சி.பள்ளி வீதி, தினசரி மார்க்கெட், அதியமான் வீதி, நொய்யல் வீதி, வெள்ளியங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மாம்பழ குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அதியமான் வீதி, கே.எஸ்.சி. பள்ளி வீதியில் உள்ள 2 மாம்பழ குடோன்களில் வேதிப்பொருட்கள் வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த 3½ டன் எடையுள்ள மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப்பதற்காக அனுப்பி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும். இதுதொடர்பாக 5 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள் வைத்திருந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வயிற்றுப்போக்கு ஏற்படும்
இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கூறும்போது, 'மாம்பழங்களை இயற்கை முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும். எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படி வைத்து பழுக்க வைப்பதற்கு அனுமதி இல்லை. சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு, அசிட்டலின் போன்ற ரசாயனங்களை வைத்து பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க கூடாது.
செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை சாப்பிடும்போது உடல் உபாதைகள் ஏற்படும். தோல் அலர்ஜி, வயிற்றுப்போக்கு ஏற்படும். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களின் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உட்பகுதி காயாக இருக்கும். பழச்சாறு குறைவாக இருக்கும். மணம் இருக்காது. சுவையும் குறைவாகவே இருக்கும். இதுதொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம்' என்றார்.