மாவில் பழ ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?-வேளாண் அறிவியல் மைய தலைவர் தகவல்


மாவில் பழ ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?-வேளாண் அறிவியல் மைய தலைவர் தகவல்
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

மாவில் பழ ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண் அறிவியல் மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈ தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவில் காய்கள் உருவாகும் சமயத்தில் பழ ஈ தாக்குதல் அதிகமாக காணப்படும். இதன் தாக்குதல் அதிகமாகும் போது 20 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பானது ஏற்பட வாய்ப்புள்ளது. மா பழ ஈயானது வெளிர் மஞ்சள் நிறத்தில், வீட்டு ஈக்கள் போன்று இருக்கும்.

முதிர்ந்த காய்கள் மீது இந்த ஈக்கள் முட்டைகளை தோலில் சொருகி இடுகின்றன. பிறகு முட்டைகள் பொறிந்து புழுக்கள் பழத்தின் சதை பகுதியை துளைத்து சென்று அதில் வளரும். இதனால் பழம் முழுவதும் அழுகி மரத்திலிருந்து கீழே உதிர்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணுக்குள் இருக்கும் பழ ஈக்களின் கூட்டு புழுக்களை மண்ணின் மேல் பகுதிக்கு கொண்டு வருவதால், சூரிய ஒளி மற்றும் பறவைகள் மூலம் அழிந்துவிடும். மரத்துக்கு அடியில் விழுந்து கிடக்கும் தாக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழித்துவிட வேண்டும். வெல்ல கரைசலுடன் பூச்சி மருந்து கலந்து ஏக்கருக்கு 8 லிட்டர் என்ற அளவில் மரத்தின் இலைகளில் தெளிப்பதன் மூலம் மா பழ ஈக்களை கட்டுப்படுத்த முடியும். மரத்தின் அடியில் 1 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் பழ ஈக்களின் கூட்டுப் புழுக்களை அழிக்க முடியும்.

பழ ஈயை கவரக்கூடிய மெதைல் யூஜினால் என்ற இனக்கவர்ச்சி பொறியினை எக்டேருக்கு 25 என்ற எண்ணிக்கையில் வைப்பதன் மூலம், ஆண் ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். இக்கலவையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். மார்ச் முதல் ஜூலை வரை தொடர்ந்து செய்தால், பழ ஈ தாக்குதலை கணிசமாக குறைக்க முடியும். தற்போது மா பழ ஈ பொறி மற்றும் அதற்கான மருந்து கலவை கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் மையத்தை அணுகி மாவில் பழ ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story