மா, வாழை காய்களை கெமிக்கல் பவுடரால் பழுக்க வைத்து விற்பனை
ஒடுகத்தூர் பகுதியில் மா மற்றும் வாழை காய்களை கெமிக்கல் பவுடர் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் மகேஸ்வரி, தேர்தல் பிரிவு தாசில்தார் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை வருவாய் ஆய்வாளர் விஜயகுமாரி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தோட்டக்கலை, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடத்தில் விளக்கினர். 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த கலந்து கொண்டு, குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அவர்கல் பேசியதாவது:-
ெகமிக்கல் பவுடர்
திப்பசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வெங்கடேசன் பேசுகையில் எனக்கு சொந்தமான சுமார் 60 சென்ட் நிலத்தில் 25 சென்ட் அளவிற்கு குளம் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த குளத்தை மூடி எனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த தாசில்தார் பட்டா இருந்தால் உங்கள் இடத்தை மீட்டுத் தருகிறேன் என்று உறுதி அளித்தார்.
இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் ஒருவர் முருங்கைக் கீரை கொண்டு வைட்டமின் மாத்திரை தயாரிக்க எனக்கு பயிற்சி வழங்க வேண்டும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
பின்னர் பேசிய விவசாயிகள் ஒடுகத்தூர், மேலரசம்பட்டு மற்றும் அதனை சுற்றி பல கிராமங்களில் கொய்யா, வாழை பயிரிடப்பட்டு வருகிறது. அவ்வாறு பயிரிடப்படும் மா, வாழை பழங்களை விரைந்து விற்பனைக்கு கொண்டு வர வியாபாரிகள் எத்தனால் பவுடரை தண்ணீரில் கலந்து, அதில் வாழை காய்களை நனைத்து பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதை விரும்பி சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நோய்கள் உற்பத்தியாகின்றன.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வாழைப் பழங்களை ஆய்வு செய்து வியாபாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என தெரிவித்தனர். இது குறித்து உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பதாக தாசில்தார் உறுதியளித்தார்.
மேலும் அக்ராவரம் பகுதியில் சுமார் 2.55 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஓடை புறம்போக்கு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். அதனை கையகப்படுத்தி அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு நிழல் தரும் மரங்களை வைக்க வேண்டும். அணைக்கட்டில் இயங்கி வரும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி வேளாண்மை இயக்குனர் இல்லாததால் விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டிய திட்டங்கள் எதுவும் சென்றடையவில்லை. உடனடியாக அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
மது பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு விவசாய நிலங்களில் பாட்டில்களை உடைப்பதால் விவசாயம் செய்யும் போது அதிக அளவில் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்துவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அனைத்து கோரிக்கைகளும் அடுத்த கூட்டத் தொடருக்கு முன் நிவர்த்தி செய்யப்படும். குறிப்பாக கெமிக்கல் மூலம் பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்தார்.