வரத்து அதிகரிப்பால் மாம்பழம் விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் மாம்பழம் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 1 Jun 2023 1:00 AM IST (Updated: 1 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பழனி ஆயக்குடி சந்தைக்கு மாம்பழம் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

திண்டுக்கல்

ஆயக்குடி சந்தை

பழனி அருகே ஆயக்குடி, கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, சட்டப்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் மா, கொய்யா சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. தற்போது 'மா' சீசன் என்பதால் தோட்டங்களில் பறிக்கப்படும் மாங்காய்கள் பழுக்க வைத்து, பின்னர் அவற்றை ஆயக்குடி சந்தையில் வைத்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். பழத்தின் ரகம், தரத்துக்கு ஏற்றவாறு விலை மாறுபடுகிறது.

தினமும் காலையில் நடைபெறும் சந்தைக்கு உள்ளுர், வெளியூர் வியாபாரிகள் வந்து மாம்பழத்தை வாங்கி செல்கின்றனர். மேலும் கேரளா, திருப்பூர், ஈரோடு என வெளியூருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக செந்தூரம், கல்லாமை, சீல்யா, பங்கனபள்ளி உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் வரத்தாகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாம்பழம் வரத்து குறைவாக இருந்ததால் சந்தையில் ஒரு கிலோ மாம்பழம் சராசரியாக ரூ.50 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

மாம்பழம் விலை வீழ்ச்சி

தற்போது ஆயக்குடி சந்தைக்கு மாம்பழம் வரத்து அதிகமாக உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஒரு கிலோ மாம்பழம் ரூ.25 முதல் விற்பனை ஆகிறது. எனவே விவசாயிகளும் வந்த விலைக்கு மாம்பழத்தை விற்று வருகின்றனர். மாம்பழ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து விவசாயி சின்னத்துரை கூறுகையில், கடந்த காலங்களில் எவ்வளவு வரத்து ஆனாலும் ரூ.40-க்கு குறையாமல் விலை போகும். ஆனால் தற்போது சந்தைக்கு போதிய அளவில் மாம்பழம் வரத்து இருந்தாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக செந்தூரம், கல்லாமை, பங்கனபள்ளி உள்ளிட்ட ரகங்கள் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. நீலம் ரகம் ரூ.30-க்கு விற்பனையாகிறது. இதனால் காய் பறிப்பு, வண்டி வாடகை ஆகியவற்றுக்கு கூட கட்டுப்படியாகாத நிலை உள்ளது. எனவே சீசன் காலத்தில் பழங்களை இருப்பு வைத்து விற்கும் வகையில் ஆயக்குடியில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். இதனை பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ள போதிலும் கிடப்பிலேயே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story