மாங்காய் விளைச்சல் பாதிப்பு
பட்டிவீரன்பட்டி பகுதியில் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம், மருதாநதி கோம்பை, சித்தரேவு, நெல்லூர், தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலை அடிவார மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் மாமரங்கள் உள்ளன. காசாலட்டு, கல்லாமை, செந்தூரம், காளப்பாடி, சப்போட்டா, கிரேப், மல்கோவா, இமாம்பசந்த் போன்ற மாம்பழங்கள் அதிகமாக விளையும் ரகங்கள் ஆகும். ஆண்டுதோறும் இங்கு கோடைக்கால மாங்காய் சீசன் மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்தும் புழு, பூச்சி தாக்குதல் காரணமாக 10 சதவீத மரங்களில் மட்டுமே மாங்காய்கள் விளைந்துள்ளன. குறிப்பாக உயர்ரக மாங்காய்கள் காய்க்கவில்லை. அதேநேரத்தில் அறுவடை செய்த மாங்காய்களுக்கும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுபற்றி மா விவசாயிகள் கூறும்போது, மாமரங்களில் புதிதாக புழு ஒன்று உருவாகியுள்ளது. இந்த புழு மரத்தில் உள்ள இலை, பூ, மாங்காய் ஆகியவற்றை சாப்பிட்டு விடுகிறது. பூச்சி மருந்து அடித்தாலும் இந்த புழுக்கள் சாவதில்லை. 90 சதவீத மரங்களில் மாங்காய்களை இந்த புழுக்கள் அழித்து விட்டன. எனவே பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இந்த புழுக்களை அழிக்க தோட்டக்கலைத்துறையினர் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றனர்.