மாடுகளுக்கு உணவாகும் மாம்பழங்கள்
பட்டிவீரன்பட்டி அருகே போதிய விலை கிடைக்காததால் மாடுகளுக்கு உணவாக மாம்பழங்களை விவசாயிகள் கொட்டி வருகின்றனர்.
மாங்காய் விளைச்சல்
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை, சித்தரேவு, தேவரப்பன்பட்டி, கோம்பை, நெல்லுார், தாண்டிக்குடி மலையடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் மாங்காய் விவசாயம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகின்றது. கடந்த மே மாதம் கோடைகால மாங்காய் சீசன் தொடங்கியுள்ளது. இந்த மாங்காய் சீசன் ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும்.
இப்பகுதியில் காசா, கல்லாமை, செந்தூரம் காளப்பாடி, சப்போட்டா, கிரேப், மல்கோவா, இமாம்பஸந்து போன்ற ரகங்கள் விளைகின்றன. இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதனை விவசாயிகளிடமிருந்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளிமாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி வரும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில வாரங்களாக மொத்த வியாபாரிகள் வராததால், மாம்பழங்களை மாம்பழ கூழ் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
சாலையோரம் கொட்டப்படும் மாம்பழங்கள்
இந்நிலையில் மரங்களில் பறிப்பதற்கு முன் மாங்காய்களில் கருப்பு நிறமாக மாறியது. இதனை வியாபாரிகள் வாங்க மறுத்தனர். மேலும் போதிய விலை கிடைக்காததால், மாம்பழங்கள் அழுகியது. இதனால் சாலையோரங்களில் மாம்பழங்களை விவசாயிகள் கொட்டி சென்றனர். இவ்வாறு கொட்டப்படும் மாம்பழங்களை மாடுகள் தின்று வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, வெளிமாநில வியாபாரிகள் வராததால் சில்லறையில் விற்பனை செய்கின்றோம். ஆனாலும் வரத்து அதிகரித்து வருவதால் ஓரளவிற்கு மேல் விற்பனை செய்ய முடியவில்லை. கிலோ ரூ.15-க்கு விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரித்தும், போதிய விலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டுள்ளோம். விவசாயிகளுக்கு நிரந்தரமான விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.