திருப்பரங்குன்றம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய மாணிக்கம்தாகூர் எம்.பி.
திருப்பரங்குன்றம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களுடன் மாணிக்கம்தாகூர் எம்.பி. கலந்துரையாடினார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களுடன் மாணிக்கம்தாகூர் எம்.பி. கலந்துரையாடினார்.
கலந்துரையாடல்
திருப்பரங்குன்றம் அருகே வேடர்புளியங்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பசுமை தோட்டத்தினை மாணிக்கம்தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். பின்னர் அவர் வேடர்புளியங்குளத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது உங்கள் எதிர்காலத்தில் என்னவாக படிக்க ஆசைப்படுகிறீர்கள்? எதிர்காலத்தில் எந்த வேலைக்கு போக விரும்புகிறீர்கள்? என்று கேள்வி கேட்டு மாணவர்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டார். மேலும் அவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயர் என்ன? மதுரை கலெக்டர் பெயர் என்ன? என்பது உள்பட பல கேள்வி கேட்டார்.
இதில் ஒரு சில கேள்விக்கு மட்டுமே மாணவர்கள் பதில் அளித்தனர். அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி., நூலகத்தில் தினசரி நாளிதழ்களை படிக்க வேண்டும். தினசரி நாளிதழ்களில் வரக்கூடிய உள்ளூர் முதல் உலகம் வரையிலான தகவல்களை அன்றாடம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் வேடர்புளியங்குளம் ஊராட்சி செயலர் வேல்முருகன், பள்ளி தலைமை ஆசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வஞ்சிக்கிறது
இதனையடுத்து சின்னசாக்கிலிப்பட்டி, மேலக்குயில்குடி, நாகமலைபுதுக்கோட்டை ஆகிய 3 ஊராட்சிகளில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டார். இதில் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, ஜெயபிரகாஷ், சுகாசினி, என்ஜினீயர் சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகர் தொகுதியை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது. இந்த பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் நிதி குறைக்கப்பட்டுள்ளது.
சாமானியர்களுக்கான அரசாக இல்லை
இந்த அரசு அதானிக்கான அரசாக இருக்கிறதே தவிர சாமானிய மக்களின் அரசாக இல்லை. கடந்த 2 பொது தேர்தல்களில் பா.ஜ.க.விற்கு அதானி எவ்வளவு நிதி கொடுத்துள்ளார் என்று கேள்வி எழுப்பி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதற்கு அவர் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன். மோடியின் தொகுதியான வாரணாசியில் பல முன்னேற்ற திட்டங்களை மோடி அரசு செய்தது. ஆனால் அங்கு ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி வருத்தத்திற்கு உரியது. காழ்ப்புணர்ச்சியோடு மோடி அரசு செயல்படுகிறது என்றால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.