தண்ணீரின்றி கருகும் மணிலா பயிர்கள்


தண்ணீரின்றி கருகும் மணிலா பயிர்கள்
x

வாணாபுரம் பகுதிகளில் தண்ணீரின்றி கருகும் மணிலா பயிர்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் மற்றும் சதாகுப்பம், வாழவச்சனூர், அகரம்பள்ளிப்பட்டு, கொட்டையூர், தென்கரும்பலூர், மெய்யூர், காம்பட்டு, சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, மழுவம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா உளுந்து உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் மணிலா பயிரிடப்பட்டு அதனை பராமரித்து வருகின்றனர்.

கடந்த 40 நாட்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட மணிலா பயிர்கள் தண்ணீரின்றி கருகி காய்ந்து வருகிறது. ஒரு பகுதியில் மழை அதிகளவில் பெய்து நீர்நிலை பகுதிகள் தண்ணீர் நிரம்பி வரும் நிலையிலும் தண்ணீர் தேவையில்லாமல் வீணாக செல்கிறது.

ஆனால் சதாகுப்பம், அந்தோணியார்புரம், மெய்யூர், வரகூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட மணிலா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. ஆனால் இப்பகுதியில் மழை இல்லை .மேலும் சாத்தனூர் அணியிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய் வழியாக செல்கிறது

ஆனால் மேடு பகுதியாக விவசாய நிலங்கள் இருப்பதால் திறந்து விடப்படும் தண்ணீர் விவசாய நிலப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இதனால் பல ஆயிரம் செலவு செய்து பயிரிடப்பட்ட மணிலா பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதால் மிகவும் வேதனையாக உள்ளது என்றனர்.


Next Story