மணிமுத்தாறு பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
மணிமுத்தாறு பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்
மணிமுத்தாறு பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தின் வருடாந்திர இயல்பான மழை அளவு 814.80 மில்லி மீட்டர். தற்போது அக்டோபர் 27- ந்தேதி வரை 416.4 மில்லி மீட்டர் பெறப்பட்டுள்ளது. இது இந்தமாதம் வரை பெறக்கூடிய இயல்பான மழை அளவான 495 மில்லி மீட்டரை விட 15.87 சதவீதம் குறைவாக பெறப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் உள்ள அணைகளில் மொத்த கொள்ளளவில் 34.5 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை நெல் 10,077 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 166 எக்டர் பரப்பளவிலும், பயறு வகை பயிர்கள் 1,260 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 625 எக்டர் பரப்பளவிலும், கரும்பு 24 எக்டர் பரப்பளவிலும் என மொத்தம் 12142 எக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தூர்வார வேண்டும்
கூட்டத்தில், நம்பியாற்றில் துலுக்கர்புரம் வடபகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். கால்நடை மருத்துவமனையை வள்ளியூருக்கு மாற்ற வேண்டும். கானார்பட்டியில் வனவிலங்குகள் தங்கும் இடத்தில் சோலார் மின்உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும். மணிமுத்தாறு பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும்.
நயினார்குளத்தில் அதிகப்படியான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவைகளை அகற்ற வேண்டும். மணிமுத்தாறு உட்கோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இட்டேரியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகள் கொடுத்தனர்.
அதற்கு கலெக்டர் பதிலளித்து பேசுகையில், "தடுப்பணை அமைப்பது தொடர்பாக அவசியம் இருந்தால் மட்டுமே அமைக்கப்படும். சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு 3-வது ரீச் வெள்ளநீர் வடிகால் ஓடையில் பெரும்பாலான பகுதிகள் தூர்வாரப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மணிமுத்தாறு ஆற்றுப்பகுதியில் காணப்படும் மணல் திட்டுகள் எல்லாம் நீர்போக்கிற்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தூர்வாரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அங்கு ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இட்டேரி பகுதியில் அறுவடை காலங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்" என்றார்.
விழிப்புணர்வு வாகனம்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் அழகிரி, வேளாண்மை துணை இயக்குனர் டேவிட் டென்னிசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுபசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.