மஞ்சநாயக்கன்பட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


மஞ்சநாயக்கன்பட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மஞ்சநாயக்கன்பட்டி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மஞ்சநாயக்கன்பட்டி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

எட்டயபுரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அந்த அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை

மஞ்சநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் உள்ள எத்திலப்ப நாயக்கன்பட்டி, பொம்மல் நாயக்கன்பட்டி, போடப்ப நாயக்கன்பட்டி, முருங்கப்பட்டி, கோடாங்கி பட்டி, இரகாமுநாயக்கன்பட்டி, கோரல் சின்னவநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மஞ்சநாயக்கன்பட்டியில் சாலைகளை புதுப்பிக்க தோண்டப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகளாகியும் இதுவரை சாலைப்பணி நடைபெறவில்லை. தெரு விளக்குகள் சரிவர எரியவில்லை.

பஞ்சாயத்து தலைவர் மீது புகார்

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. சுகாதார பணிகளும் நடைபெற வில்லை. எனவே, செயல்படாமல் இருக்கும் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் க.மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story