மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
கள்ளக்குறிச்சியில் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட மாரத்தான் ஓட்டம் கச்சராபாளையம் சாலை வழியாக 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏர்வாய்பட்டிணம் ஸ்ரீ விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 206 பேர், 115 பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.4 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 4 மற்றும் 5-ம் பரிசாக தலா ஆயிரம் ரூபாய், 6 மற்றும் 7-ம் பரிசாக தலா ரூ.500 வழங் கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார், பிரபாகரன், உடற்கல்வி இயக்குனர்கள் பாலாஜி, ஹரிகரன், பாலுசாமி மற்றும் சுற்றுச்சூழல்துறை அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.