மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம்
பழனியில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்துசமய அறநிலையத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மஞ்சப்பையை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், பழனியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், சப்-கலெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். தாசில்தார் பழனிசாமி, பழனியாண்டவர் மகளிர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனி பாத விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம், கிரி வீதிகள் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தின்போது, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதுடன், மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.