திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் 19 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளால் 19 பேர் காயம் அடைந்தனர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே குமாரப்பேட்டை கிராமத்தில் உள்ள பூமலச்சியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு நேற்று குமாரபேட்டை, கே.ஆத்தங்குடி, என்.வைரவன்பட்டி, திருமூக்காணிப்பட்டி, சென்னல்குடி ஆகிய ஐந்து ஊர் நாட்டார்களால் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டுதலோடு தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதையடுத்து தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன், தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தொழுவில் 290 மாடுகள் பதிவு செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.
மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக 2 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.