காதலியை தாயாக்கிய வாலிபர் ஆணவக்கொலை?
காதலியை தாயாக்கிய வாலிபர் ஆணவக்கொலை? செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்கப்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை நெருஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் லோகநாதன் மகன் ராஜா (வயது 23). இவர் கோட்லாம்பாக்கத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பிணியானாள். இது பற்றிய புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ராஜாவும் ஜாமீனில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார். நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், துணை மேயருமான தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி ஆகியோருடன் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது தாய் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து மனு அளித்தனர். அதில், ராஜாவை அடித்து கொலை செய்து விட்டனர். அவரது உடலில் காயங்கள் இருந்தது. ஆகவே அவரை ஆணவக்கொலை செய்திருப்பார்களோ? என்ற சந்தேகம் உள்ளது. இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.