நாடார் சமுதாயம் பற்றி இழிவாக காணொலி வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும்


நாடார் சமுதாயம் பற்றி இழிவாக காணொலி வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும்
x
திருப்பூர்


நாடார் சமுதாயத்தை பற்றி இழிவாக காணொலி வெளியிட்ட ஸ்ரீவித்யா மற்றும் அமுதரசன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கொங்கு மண்டல நாடார் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் எஸ்.வி.பூமிநாதன், பனங்காட்டு படை கட்சி மாநில அமைப்பு செயலாளர் இமானுவேல், கொங்கு குணாளன் நாடார் பேரவை தலைவர் இல.ஈஸ்வரன், தமிழ்நாடு நாடார் மக்கள் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகி பொன்மணி, கொங்கு மண்டல நாடார் உறவின்முறை தலைவர் சாமிநாதன், அகில இந்திய நாடார் கூட்டமைப்பு சார்பில் மார்க்கெட் ஜீவா, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காசி உள்பட பலர் நேற்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேர, சோழ, பாண்டியர் வம்சமான எங்கள் நாடார் சமூகத்தை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசி உள்ளனர். பெண்கள் என்று கூட பாராமல் எங்கள் சமுதாயத்து தாய்மார்களையும், சகோதர, சகோதரிகளையும் மிகவும் இழிவாக பேசி உள்ளனர். இதனால் நாடார் சமுதாய மக்கள் மிகுந்த மன வேதனைக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகி உள்ளனர். சாதி வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையோடு அமைதி பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சாதி மோதலை தூண்டும் வகையில் சாதிய வன்மத்தோடு காணொலி வெளியிட்ட ஸ்ரீவித்யா மற்றும் அமுதரசன் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிய தண்டனை அளிப்பதுடன், சமூக வலைதளங்களில் உலாவி வரும் சம்பந்தப்பட்ட அந்த காணொலியை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story