அனுமதியின்றி வீட்டில் வெடிபொருட்கள் தயாரிப்பு
திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டு, கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
வெடிபொருட்கள் தயாரிப்பு
திருப்பத்தூரை அடுத்த கொரட்டி உள்வட்டம், விஷமங்கலம் கிராமம், பாணக்காரவட்டம் பகுதியில் எந்தவித அனுமதியுமின்றி வெடி பொருட்கள் தயாரிப்பதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியனுக்கு செல்போன் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய்துறையினருக்கும், போலீசாருக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் திருப்பத்தூர் மண்டல துணை தாசில்தார் முரளி கிருஷ்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் சிவா, கிராம நிர்வாக அலுவலர் ஆதிலட்சுமி ஆகியோர் சம்மந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
கட்டிடத்திற்கு சீல்
அப்போது விசமங்கலம் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 55) என்பவர் வீட்டில் வெடிபொருட்கள் தயாரிப்பது கண்டறியபட்டது. அதைத்தொடர்ந்து அங்கிருந்து 6 கிலோ வெடிபவுடர், திரி கயிறு, பட்டாசு தயாரிக்கும் உப்பு பவுடர் 20 கிலோ, பாணம் பட்டாசு 30 பண்டல், பட்டாசு தயாரிக்கும் கந்தக பவுடர் 20 கிலோ ஆகியவை கைப்பற்றப்பட்டது.
மேலும் வெடிபொருட்கள் தயாரித்த சிமெண்டு ஷீட்டாலான வீட்டிற்கு வருவாய்துறையினர், போலீசார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டருக்கு தகவல் ிடைத்த ஒரு மணி நேரத்தில் சீல் வைக்கப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.