வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு ஏராளமானோர் பாதயாத்திரை
தஞ்சை வழியாக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு ஏராளமானோர் கடும் வெயிலிலும் உற்சாகமாக பாதயாத்திரை சென்று வருகின்றனர்.
தஞ்சை வழியாக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு ஏராளமானோர் கடும் வெயிலிலும் உற்சாகமாக பாதயாத்திரை சென்று வருகின்றனர்.
வேளாங்கண்ணி பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயம் மதநல்லிணக்கத்துக்கு அடையாளமாக விளங்கி வருகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிகதலமாக விளங்குவது தனி சிறப்பாகும்.
இக்கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பாதயாத்திரையாகவும், சைக்கிள் பேரணியாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
தஞ்சை வழியாக
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த திருவிழாவுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருவார்கள்.அதன்படி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி தற்போது தஞ்சை மற்றும் தஞ்சை வழியாக திருச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் குழந்தை ஏசு, மாதா சொரூபங்களையும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்துக்கொண்டு ஊர்வலமாக செல்கின்றனர். .இதனால் தஞ்சை புறவழிச்சாலையில் வழி நெடுக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்பவர்களை காண முடிகிறது.
கடும் வெயில்
இதுகுறித்து திருச்சியில் இருந்து பாதயாத்திரை சென்றவர்கள் கூறுகையில்:- நாங்கள் நேற்று முன்தினம் திருச்சி சங்கிலியாண்டவர் புரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினோம். 30-க்கும் மேற்பட்டவர்கள் மாதா சொரூபத்தை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறோம்.
வழக்கத்தைவிட இந்த ஆண்டு தஞ்சை பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது.இருந்தபோதிலும் மாதாவின் புகழ்பாடியபடி உற்சாகமாக பாதயாத்திரை செல்கிறோம். வருகிற 7-ந்தேதி காலை வேளாங்கண்ணியை சென்றடைவோம் என தெரிவித்தனர்.