கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து போலீசாருக்கு மாபா பயிற்சி
கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து 200-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு மாபா பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையில் கலவரத்தின் போது அமைதியை ஏற்படுத்தும் வகையில் மாபா பயிற்சி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இருதரப்பினரிடையே ஏற்படும் கலவரத்தின் போது கூட்டத்தை எப்படி கலைப்பது, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அச்சுறுத்தி கூட்டத்தை கலைப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை எவ்வாறு கலைப்பது, தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைப்பது, ரப்பர் குண்டு பயன்படுத்துவது, சட்ட விதிகளுக்குட்பட்டு துப்பாக்கியை பயன்படுத்துவது, தூரத்தில் உள்ளவர்களை துப்பாக்கி மூலமாக புகை குண்டு வீசி கூட்டத்தை கலைப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் இன்ஸ்பெக்டர்கள் ஆண்டிமடம் முத்துக்குமார், உடையார்பாளையம் வேலுச்சாமி, தா.பழூர் கதிவரன், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நடேசன், தனஞ்ஜெயன், ரமேஷ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.