நாமக்கல்லில் போதை பொருள் ஒழிப்பு மினி மாரத்தான் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் போதை பொருள் ஒழிப்பு மினி மாரத்தான் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
நாமக்கல் குளக்கரை திடலில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கடந்த 6-ந் தேதி முதல் தொடங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. இதன் ஒரு பகுதியாக நேற்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா மினி மாரத்தானை தொடங்கி வைத்தார். நகர்மன்ற தலைவர் கலாநிதி முன்னிலை வகித்தார். இதில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவிகள், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ஓடினர். நாமக்கல் உழவர் சந்தை, ஆஞ்சநேயர் கோவில், சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு, பஸ் நிலையம் வழியாக மீண்டும் குளக்கரை திடல் வந்து முடிவுற்றது. முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் போதை பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். இதில் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பால்கிரேஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.