மினி மாரத்தான் போட்டி
கிருஷ்ணகிரியில் நடந்த மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரியில் நடந்த மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மினி மாரத்தான் போட்டி
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்து, போட்டியில் பங்கேற்றார்.
இதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் ஓட்டம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி ராயக்கோட்டை மேம்பாலம், பெத்ததாளப்பள்ளி, தாலுகா போலீஸ் நிலையம் சென்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
பாராட்டு சான்றிதழ்கள்
பின்னர், இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் ஜார்ஜ், பெருமாள், மேகநாதன் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்த உமாவதி, பிரியா, டாக்டர் சங்கீதா ஆகியோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.முதுகானப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது. அத்துடன் சுகாதார பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார், டாக்டர்கள் திருலோகன், விமல், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் செல்வி, கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, சுகாதாரத்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் மாணவ, மாணவிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.