கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 73 ஆயிரத்து 230 பேர் பங்கேற்கும் மாரத்தான்


கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 73 ஆயிரத்து 230 பேர் பங்கேற்கும் மாரத்தான்
x

சென்னையில் வருகிற 6-ந் தேதி கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 73 ஆயிரத்து 230 பேர் பங்கேற்கும் மாரத்தான் போட்டி நடத்த இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தஞ்சாவூர்

சென்னையில் வருகிற 6-ந் தேதி கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 73 ஆயிரத்து 230 பேர் பங்கேற்கும் மாரத்தான் போட்டி நடத்த இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பட்டுக்கோட்டையில் மாரத்தான் போட்டி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நேற்று கருணாநிதி நூற்றாண்டு விழா மினி மாரத்தான் போட்டி நடந்தது.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பச்சைக்கொடி காட்டி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அண்ணாதுரை எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் சண்முகப்பிரியா, நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பரிசளிப்பு விழா

5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. 14 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் 10 கிலோமீட்டர், 17 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் 15 கிலோமீட்டர், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 20 கிலோ மீட்டர் என பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதன் முடிவில் சூரப்பள்ளம் புறவழிச்சாலை பகுதியில் பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். தலைமை தணிக்கை குழு உறுப்பினர் ஏனாதி பாலு, எம்.எல்.ஏ.க்கள் அசோக்குமார், டி.கே.ஜி. நீலமேகம், துரை.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பரிசு வழங்கினார்

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் போட்டியில் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்தருக்கு பொன்னாடை போர்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

சென்னையில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 4-வது ஆண்டாக மாரத்தான் போட்டி நடத்த இருக்கிறோம். இதில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க இருக்கிறார். இந்த மாரத்தான் போட்டியை பொறுத்தவரை உலக சாதனை படைக்க இருக்கிறது. அந்த போட்டியில் பங்கேற்க 73 ஆயிரத்து 230 பேர் பதிவு செய்துள்ளனர்.

கின்னஸ் சாதனை

உலகில் முதல் முறையாக 'லாங்கஸ்ட் ரன்னிங் சீரிஸ்' என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை படைக்க இருக்கிறது. கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் நடைபெற உள்ள சென்னை மாரத்தானில் 73 ஆயிரத்து 230 பேர் பங்கேற்கிறார்கள். இது சாதாரண எண்ணிக்கை அல்ல. உலகில் இதுவரை எங்கேயும் ஒரே நேரத்தில் 'லாங்கஸ்ட் ரன்னிங் சீரியஸ்' என்ற தலைப்பில் அவ்வளவுபேர் ஓடியதில்லை. முதன் முதலில் சென்னையில் தான் ஓட இருக்கிறார்கள். இது சென்னைக்கான பெருமை மட்டும் அல்ல. இந்தியாவுக்கான பெருமை மட்டுமல்ல உலக அளவிலான பெருமை. அதற்கு முன்னோட்டமாக இன்று (நேற்று) மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முடிவில் பாலமுருகன் நன்றி கூறினார்.


Next Story