மறவமங்கலம் கால்வாய் திட்டத்தை சீரமைத்து முல்லை பெரியாறு தண்ணீர் கொண்டு வர வேண்டும்
மறவமங்கலம் கால்வாய் திட்டத்தை சீரமைத்து முல்லை பெரியாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.
காவிரி-வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் காளையார் கோவிலில் மாவட்ட தலைவர் .கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் தவம் வரவேற்றார். மாவட்ட செயல் திட்டத்தை செயலாளர் அய்யனார் முன்மொழிந்தார். கூட்டத்தில் மாநிலச் செயலாளர் இராம.முருகன், மாநில துணைத்தலைவர் மச்சேஸ்வரன், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாநில பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் பருவமழை குறைவு காரணமாக பல்வேறு பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை காலங்களில் காளையார்கோவில், இளையான்குடி தேவகோட்டை தாலுகாக்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் மானாவாரி நேரடி விதைப்பு செய்யப்பட்டது. மழை இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலைமையில் இருக்கிறது. சில பகுதிகளில் பயிர்களை ஆடு, மாடுகளை விட்டு மேயவிடும் அளவுக்கு சென்றுவிட்டது.
சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சிவகங்கை மாவட்ட நிர்வாகமும் வேளாண்மைத் துறையும் கவனம் செலுத்தி காளையார் கோவில், இளையான்குடி, தேவகோட்டை தாலுகாக்களில் பயிர் இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மறவ மங்கலம் கால்வாய் திட்டத்தை முழுமையாக சீரமைப்பு செய்து முல்லைப்பெரியாறு தண்ணீரை கொண்டு வர தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு ரூ. 2500-ஐ வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.