காமதேனு வாகனத்தில் மாரியம்மன் வீதி உலா-திரளான பக்தர்கள் தரிசனம்
ஊட்டி மாரியம்மன் நேற்று, ஹெத்தை அம்மன் அலங்காரத்தில், காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்தார்.
ஊட்டி
ஊட்டி மாரியம்மன் நேற்று, ஹெத்தை அம்மன் அலங்காரத்தில், காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்தார்.
கோவில் திருவிழா
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். ஆண்டுதோறும் ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி கலச பூஜை மற்றும் பூச்சொரிதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. கோவில் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து வருகிற 21-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெறும்.
ஹெத்தை அம்மன் அலங்காரம்
இந்தநிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் சார்பில் விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஊட்டி மாரியம்மன் ஹெத்தையம்மன் அலங்காரத்தில், காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்தார். இந்த தேர்பவனி மாரியம்மன் கோயிலில் தொடங்கி கமர்சியல் சாலை, காபி அவுஸ், லோயர் பஜார் மற்றும் மெயின் பஜார் வழியாக தேர்பவனி வந்தது. இதை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்தும், நடனமாடியும் அம்மனை வீதி உலா அழைத்து வந்தனர். மேலும், அன்னதான நிகழ்ச்சி, இசை கச்சேரி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
இதேபோல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முகூர்த்த கால் நடுதல், 17-ந் தேதி தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் சிறப்பு கனகாபிஷேகம், விநாயகருக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து 19-ந் தேதி மஞ்சள் நீராட்டு, கொடி இறக்கம், 21-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.